நன்மையான வேதவசனங்கள்
பால் பிரட் கீபன் ஏசுரத்தினம்
சங்கீதம் 119, வசனம் 105. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
அறிமுகம்
தேவனுடைய வார்த்தைகள் நம்பிக்கைக்கும் உற்சாகத்திற்கும் அடித்தளம். கடினமான காலங்களைக் கடந்துவர வசனங்களை வாசிப்பது எனக்கு உதவின.
உங்கள் கடினமான சூழ்நிலையில் நம்பிக்கையை இழக்காதீர்கள். மனம் தளர்ந்து தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் உதவியற்ற சூழ்நிலைகளில், கடவுளை நம்புங்கள். கர்த்தர் உங்களை நிச்சயம் விடுவிப்பார்.
நாம் நினைப்பதற்க்கும் எதிர்ப்பார்ப்பதற்க்கும் மேலாக தேவன் நம்மையும் நம் சூழ்நிலையையும் அறிவார், ஆகவே சோர்ந்துபோகாமல் பொறுமையாக நல் வாழ்வை எதிர்நோக்கி தொடருவோம்.
இந்த புத்தகத்தில் என் கடினமான காலங்களைக் கடக்க உதவிய சில வேதவசனங்களைத் தொகுத்து உள்ளேன். இவை தங்களுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கை தருவதாக அமையும் என நம்புகிறேன்.
ஏற்ற காலத்தில் கர்த்தர் உங்களை விடுவிப்பது நிச்சயம். அதுவரைக்கும் அனுதினமும் பெலனடையவும் நம்பிக்கை இழக்காமல் தொடரவும், நேரம் வாய்க்கும்போதெல்லாம் வேதவசனங்களை வாசியுங்கள்.
சீக்கிரத்தில் உங்கள் நிலைமையில் முன்னேற்றம் உண்டாகவும்; கர்த்தர் உங்களை விடுவிக்கவும் வேண்டுகிறேன்.
ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் வேதவசனங்கள்
சங்கீதம் 27, வசனம் 13. நானோ ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
சங்கீதம் 31, வசனம் 22. உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
1 பேதுரு 5, வசனம் 7. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
சங்கீதம் 120, வசனம் 1. என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
ஏசாயா 40, வசனம் 29 முதல் 31 வரை. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
சங்கீதம் 126, வசனம் 1 முதல் 6 வரை. அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
எரேமியா 30, வசனம் 22. நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
யோசுவா 1, வசனம் 9. நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
யோவான் 11, வசனம் 40. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?
யாத்திராகமம் 23, வசனம் 20. வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.
ஏசாயா 25, வசனம் 8. அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
சங்கீதம் 94, வசனம் 17 முதல் 19 வரை. கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம் பண்ணியிருக்கும். என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
மத்தேயு 28, வசனம் 20. இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.
2 கொரிந்தியர் 6, வசனம் 2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.
ஏசாயா 64, வசனம் 4. தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.
சங்கீதம் 9, வசனம் 10. கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.
சங்கீதம் 34, வசனம் 4 முதல் 6 வரை. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
சங்கீதம் 34, வசனம் 18. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
சங்கீதம் 62, வசனம் 5. என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
1 பேதுரு 1, வசனம் 3 முதல் 7 வரை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
ஏசாயா 26, வசனம் 3. உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
உபாகமம் 31, வசனம் 8. கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்.
ரோமர் 10, வசனம் 9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
யோசுவா 3, வசனம் 5. உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்.
சங்கீதம் 50, வசனம் 15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
ரோமர் 6, வசனம் 23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
எபிரெயர் 13, வசனம் 8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
ரோமர் 5, வசனம் 8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
சங்கீதம் 46, வசனம் 1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
சங்கீதம் 46, வசனம் 11. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.
சகரியா 9, வசனம் 12. நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
ஏசாயா 60, வசனம் 20. கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்.
மீகா 7, வசனம் 15. உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
சங்கீதம் 120, வசனம் 1. என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
சங்கீதம் 18, வசனம் 28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
மீகா 2, வசனம் 13. தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்.
யாத்திராகமம் 14, வசனம் 14. கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.
சங்கீதம் 37, வசனம் 4 முதல் 9 வரை. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
சங்கீதம் 57, வசனம் 1 மற்றும் 2. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
சங்கீதம் 13, வசனம் 6. கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங்கீதம் 66, வசனம் 19 மற்றும் 20. மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
எரேமியா 29, வசனம் 11 முதல் 14 வரை. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 45, வசனம் 2 முதல் 4 வரை. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.
ஏசாயா 53, வசனம் 10. கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
ஏசாயா 58, வசனம் 11. கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
ஏசாயா 41, வசனம் 10. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
சங்கீதம் 17, வசனம் 6 முதல் 9 வரை. தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதிலருளுவீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும். உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும். கண்மணியைப்போல என்னைக் காத்து, என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
ஏசாயா 12, வசனம் 2. இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
சங்கீதம் 59, வசனம் 16 மற்றும் 17. நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
சங்கீதம் 18, வசனம் 6. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
ஏசாயா 42, வசனம் 3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
சங்கீதம் 4, வசனம் 1. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்கு பதிலருளும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பதைக் கேட்டருளும்.
சங்கீதம் 31, வசனம் 1 முதல் 3 வரை. கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
யோபு 36, வசனம் 15. சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.
சங்கீதம் 31, வசனம் 5. உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் சத்தியபரனாகிய கர்த்தாவே நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
சங்கீதம் 25, வசனம் 20. என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும் நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் உம்மை நம்பியிருக்கிறேன்.
லூக்கா 12, வசனம் 6 மற்றும் 7. இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது ஆகையால் பயப்படாதிருங்கள் அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
ஜெபம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் அன்புள்ள பிதாவே, எங்களை இந்த இக்கட்டான சுழலில்லிருந்து விடுவியும்.
உம்மையே நாங்கள் வாஞ்சையோடு தேடுகிறோம். உமது வார்த்தை எங்களுக்கு ஆறுதல் தந்தது. எங்கள் நல் வாழ்விற்கான நம்பிக்கை நீரே, நாங்கள் முன்நோக்கி சென்று நீர் எங்களுக்காக வைத்திருக்கிற நன்மைகளை சுதந்திரிக்க உமது பெலனைத் தாரும்.
நீர் எங்களுக்காக வைத்திருக்கிற நல்ல திட்டத்தை காண எங்கள் கண்களைத் திறந்தருளும்.
எல்லா துதியும், கனமும், மகிமையும் உமக்கே செலுத்துகிறோம். உமது குமாரன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.